unique visitors counter
Published On: Wed, Jan 4th, 2017

“நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது”

நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சுகாதார சேவையை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப் போவதில்லை. இலவச சுகாதார சேவையை தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

சுகாதார அமைச்சர் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றினார்.இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு குறித்த விடயத்தையும் குறிப்பிட்டார்.

ராஜபக்‌ஷக்களுடன் தனக்கு எந்தவித கொடுக்கல் வாங்கலும் கிடையாது. மக்கள் ஆணையை தாம் ஒருபோதும் தவறான முறையில் பயன்படுத்தப் போவதில்லையென ஜனாதிபதி இவர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,

சீனாவின் உதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக வலையமொன்றும்; உருவாககப்படவுள்ளது. இதன் மூலம் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நிலவும் வறுமை நிலைக்கு தீர்வு காணப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் அவரது பிறந்த நாளுக்கு பதாதைகளை விளம்பரப்படுத்தி துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் திறந்து வைத்தது மட்டும்தான். ஆனால் இந்த பொருளாதார நிலையங்களை எப்படி கொண்டு நடத்துவது என்று ஆராயப்படவில்லை.

அதிகாரப் பகிர்வு தற்போது உலக நாடுகளில் இடம்பெற்றுவருகிறது. நாட்டிற்கு தேசிய கொள்கையொன்று இருக்க வேண்டும்.சிங்கள இனவாதிகள் அதிகமாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே பேசுகிறார்கள். தமிழர்கள் மத்தியிலும் இவ்வாறானோர் இருக்கின்றனர். இந்த இனவாத அரசியல் முறை நாட்டை அழித்துவிட்டது. சிலர் இன்றும் இதையே செய்து வருகின்றனர். தங்களை புத்திஜீவிகள் என கூறிக் கொள்ளுவோர் நாட்டைப் பற்றி சிந்திப்பதில்லை.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பாக சிலர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கு சிங்கள மக்களின் விருப்பம் அவசியம் என்று கூறியிருக்கின்றார். இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

2017ல் ஊழல், மோசடி, மனித படுகொலைகள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். சில ஜனாதிபதி சட்டத்தரணிகள் இன்னமும் கிணற்றுத் தவளைகளாக செயற்படுகின்றனர். நாட்டின் சட்ட திட்டங்கள் தெரியாமல் நகல் சட்டங்களை தயாரிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>